கண்டி, பல்லேகலயில் நடைபெற்று முடிந்த லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியப் பிரஜை பிரேம் தாக்கூருக்கு கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தாக்கூரின் சட்ட பிரதிநிதிகள் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினர்.
அந்த கோரிக்கைக்கு இணங்க நீதிவான் 500,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 5,000,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலதிகமாக சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு புதன்கிழமையும் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.
வழக்கின் அடுத்த விசாரணை 2025 ஜனவரி 27, அன்று நடைபெறும்.
மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் தொடர்பில் சந்தேகநபர் யோசனை ஒன்றை முன்வைத்திருந்த நிலையில், அது குறித்த வீரர் ஐசிசிக்கு தகவல் வழங்கியதையடுத்து இந்த கைது இலங்கையின் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.