கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.
எனவே தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.
வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
அவர்கள் செய்த கொலை கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக பைடன் கூறினாா்.
கடந்த 2003 முதல் மத்திய நீதிமன்றதனால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
வரும் ஜனவரி 20 முதல் டொனால்டு டிரம்ப் அதிபராக உள்ளார் என்பதால் அவரிடம் இருந்து மரண தண்டனை கைதிகளை பாதுகாக்க ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.