அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் கலா ஓயா நிரம்பி வழிவதால், வில்பத்து தேசிய பூங்காவுக்கான எழுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து கலா ஓயா ஊடாக பாயும் சுமார் 6,000 கன அடி நீர் வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லும் எழுவன்குளம் – கலா ஓயா காலணி பாலத்தின் ஊடாக பாய்ந்து அப்பகுதியை முழுமையாக வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு வில்பத்துவுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை என வில்பத்து தேசிய பூங்காவின் எழுவன்குளம் நுழைவு வாயிலுக்குப் பொறுப்பான வனவிலங்கு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
மேலும், மாதுரு ஓயாவை அண்மித்த பகுதிகள், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் யான் ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மகாவலி ஆற்றை சூழவுள்ள பல பகுதிகளுக்கும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.