இஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் போராளிக் குழுவிற்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8:30 மணிக்கு அமுலுக்கு வரவுள்ளது.
இந்த ஒப்பந்தம் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவால் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பதற்கு முன்னதாக வந்துள்ளது.
மூன்று கட்ட போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை GMT 0630 மணிக்கு அமலுக்கு வரும்.
காசா பகுதியில் போர் நிறுத்தம் என்பது ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளால் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது ஆகியவை அடங்கும்.
மேலும், பாலஸ்தீனத்தில் 46,000 பேரும் இஸ்ரேலில் 1,200 பேரும் 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 15 மாதப் போரினை முடிவுக்கு கொண்டு வரவும் வழிவகுக்கும்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர், காசாவுக்கு உதவி வழங்குவதற்கான அதன் தயாரிப்புகளை முடுக்கிவிட்டதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் நிறுவனம் கூறுகிறது.
இதேவேளை, சனிக்கிழமை இரவு ஜெருசலேமில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் போர் தொடர வேண்டும் என்று கோஷம் எழுப்பி ஒரு முக்கிய சாலையை சிறிது நேரம் மறித்து போராட்டம் நடத்தியும் இருந்தனர்.