கடந்த ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், 50,000 இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் அமைந்துள்ள உள்ளூர் நீதிமன்றம் திங்களன்று (20) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மாநில அரசு 17 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்துவிட்டனர்.
முந்தைய நாள் விசாரணையின் போது, தண்டனையின் அளவு குறித்து ஏதாவது சொல்ல வேண்டுமா என்று நீதிபதி கோரிய போது, சஞ்சய் ராய் நீதிமன்றத்தின் முன் தான் குற்றமற்றவர் என்று கூறினார்.
கொல்கத்தா பாலியல் வன்புணர்வு-கொலை வழக்கு
2024 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில் வைத்தியசாலையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை மருத்துவ பயிற்சி பெற்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்குற்றம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபர் மறுநாள் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தா பொலிஸார், உயிரிழந்தவரின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட புளூடூத் இயர்போன் மூலம் சஞ்சய் ராயை அடையாளம் கண்டனர்.
ராய் தனது கழுத்தில் புளூடூத் இயர்போன் கருவியுடன் கருத்தரங்கு மண்டபத்திற்குள் நுழைவது சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டது.
இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் கண்டனத்துக்கும், ஆயிரக்கணக்கான மக்களின் கொந்தளிப்புக்கும் வழிவகுத்தது.