கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெறுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளதாவது” தெற்கில் உள்ளவர்கள் நினைவேந்தலை பயங்கரவாதம் என்கின்றனர். இது நெறிமுறையை மீறும் விதமாகும். அரசாங்கத்துக்கு ஏற்றாட் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமை பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் தொடர்பான இணையத்தளத்திற்கு சென்று அந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள முயற்சித்தேன்.
ஆனால் இன்னும் விரிவான விளக்கங்கள் அவசியமாகும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பெரிய ஆணையை வழங்கியுள்ளார்கள். ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளது. இதனை மீளப்பெறுவதாக கூறினாலும் பொலிஸார் இதனை எப்போதும் தவறாகவே பயன்படுத்துகின்றனர்.
அரசாங்கம் செய்யாவிட்டாலும் பொலிஸார் தவறான வகையிலேயே இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும். இதனையே நாம் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறோம். இந்த சட்டம் பாடசாலை ஆசிரியர்கள் மீதும் பயன்படுத்தப்படுகின்றது” இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல, நேற்று சபையில் பதில் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.