மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மொத்தமாக 20 விக்கட்டுக்கள் இன்றைய நாளில் வீழ்த்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் நொமன் அலி ஹட்ரிக் விக்கட்டினை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. பாகிஸ்தான் அணியின் நொமன் அலி 06 விக்கட்டுக்களை கைப்பற்றியதோடு ஹெட்ரிக் சாதனையையும் நிகழ்த்தி அசத்தினார்.
38 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அடுத்த 3 விக்கட்டுக்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி இவ் ஹெட்ரிக் சாதனையை படைத்தார் நொமன் அலி. மேற்கிந்திய தீவுகள் அணி அதன்பிறகு தாக்கு பிடித்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியும் தடுமாற தொடங்கியது. அடுத்தடுத்து விக்கட்டுக்களை பறிகொடுத்து 154 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியின் முதல் நாளிலேயே இரு அணிகளும் தங்களது சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடதக்கது.