கடந்த 2000ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளிவந்த திரைப் படம் ‘அலைபாயுதே’. தமிழில் வெளிவந்த காதல் திரைப்படங்களுள் ”அலைபாயுதே” இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இத்திரைப்படம் வெளிவந்து 24 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை குறையவில்லை.
இந்நிலையில் இத் திரைப்படம் குறித்து அண்மையில் ஊடகமொன்றுக்கு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் மணிரத்தினம் ‘அலைபாயுதே’படத்தை முதலில் ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்திருந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில்”’நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்கதான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஷாருக்கானும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், இப் படத்தின் இறுதிக் கட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாகத் தெரியவில்லை.
அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல் ‘தில் சே’ படத்தை இயக்கினேன். தில் சே படத்திற்கு பின்னர்தான் அலைபாயுதே கதையில் என்ன விடுபட்டது என்பதை கண்டுபிடித்தேன்’ எனத் தெரிவித்தார்.
இதேவேளை அலைபாயுதே படம் இந்தியில் ‘சாத்தியா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அதனை ஷாட் அலி இயக்கியிருந்தார் என்பதும் அதில் விவேக் ஓபராய் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.