2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 321 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கூற்றுப்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் தொடர்பான 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளில் அதிகபட்சமாக 2,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்களை யாசகர்களாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு குழந்தைகளை பரிந்துரைப்பது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தில் சிறுவர் திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தப்பட்டதாக 151 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டு தற்கொலை முயற்சிகள் தொடர்பான 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பாவனை தொடர்பான 120 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில் வயதுக்குட்பட்ட கர்ப்பம் தொடர்பான 53 முறைப்பாடுகளும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.