உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், 2,763 அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகள் இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2024 மார்ச் தரவுகளின்படி இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் 39 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளது. தமிழகத்தில் 3 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சி ஆகிய 3 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
நமது உரிமை காக்கும் கட்சி தியாகராயநகர் முகவரியிலும், மக்கள் முரசு கட்சி கொடுங்கையூர் பகுதியில் இருந்தும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2025 ஜனவரியில் 21 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் என்ற பிரிவில் அந்த கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
2,763 அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகளில் 50 சதவீத கட்சிகள் தேர்தலை சந்திக்காமல் LETTER PAD கட்சிகளாக வலம் வருவது புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. 2022-ம் ஆண்டு 86 கட்சிகளை நீக்கியும், 253 கட்சிகள் செயல்படாதவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் பெருக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் வலிமையான ஜனநாயக திருவிழாவில் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது பெரும் கனவாகவே இருந்து வருகிறது. அந்த கனவை நோக்கி ஜனநாயக அரசியல் தற்போது நகர தொடங்கியிருக்கிறது. 2026-ம் ஆண்டு ஜனநாயக திருவிழாவான சட்டசபை தேர்தலை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் சந்திக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.