வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என்று பெயரிடப்பட்டது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். இப்படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. ‘அனிமல் மற்றும் கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ‘தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது.
அரசியல்வாதியாக மாறியுள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படபிடிப்பும் 2025 மே மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி நடிகர் விஜய் அரசியலிலும் பிஸியாக இருப்பதால் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என அப்டேட் வெளிவந்துள்ளது.
அடுத்தது இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தை 2026 பொங்கல் தினத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.