அதிக ஆபத்துள்ள 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை இலக்காகக் கொண்ட மூன்று நாள் டெங்கு தடுப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மார்ச் 27-29 வரை நடத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு தடுப்புத் திட்டம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்கள் போன்ற அதிக நுளம்புகள் பெருகும் பகுதிகளில் கவனம் செலுத்தும்.
இலங்கையின் பல பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.
வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை டெங்கு தடுப்பு திட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்படும்.
இந்த ஆண்டு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.