2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் திங்கட்கிழமை (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.
ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி, முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்து, இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஷ்வனி குமாரின் அறிமுகத்தால் தனது அதிர்ஷ்டத்தை மாற்றியது.
அஷ்வனி குமார் தனது முதல் ஐ.பி.எல். ஆட்டத்தில் பந்துவீச்சில் சிறந்த விளங்கி 24 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
கொல்கத்தாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் மும்பை வேகப்பந்து வீச்சாளர்களால் சீர்குலைந்தது.
இரண்டு ஓவர்களில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட தீபக் சஹார் 19 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
மறுமுனையில், டிரென்ட் போல்ட் சுனில் நரேனை இரண்டு பந்துகளில் டக் முறையில் ஆட்டமிக்கச் செய்தார்.
பின்னர் இலகுவான சேஸிங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.
தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
கொல்கத்தா அணி மூன்று ஆட்டங்களில் இரண்டாவது தோல்வியை சந்தித்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக அஸ்வனி குமார் தெரிவானார்.
மும்பை அடுத்ததாக வெள்ளிக்கிழமை (04) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் விளையாடுகிறது.
கொல்கத்தா வியாழக்கிழமை (03) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.