அம்பலாங்கொடை மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுகளில் பதிவான இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மார்ச் 14 மாலை, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லந்தோட்டையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் குற்றச் செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று பிற்பகல் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய மெட்டியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மார்ச் 31 ஆம் திகதி அதிகாலை அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று பிற்பகல் இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.