2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (09) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை எதிர் கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகும்.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதற்கு முன்பு ஆறு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் குஜராத் 5-1 என்ற வெற்றியைப் பெற்றுள்ளது.
GT அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சுப்மன் கில் தலைமையிலான GT அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
அதன் பின்னர் மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து எளிதில் வீழ்த்தியது.
GT அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு நல்ல போர்மில் உள்ளனர்.
இவர்களின் நிலையான ஆட்டம் தான் குஜராத்தை வீறுநடை போட வைக்கிறது.
பந்து வீச்சில் மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் கலக்குகிறார்கள்.
மறுபுறம் ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் தோற்றது.
அடுத்து தொடர்ச்சியாக சென்னை, பஞ்சாப்பை வீழ்த்தியது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா, ஹசரங்காவும் பலம் சேர்க்கிறார்கள்.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ராஜஸ்தானுக்கு எதிரான தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையில் உள்ள குஜராத் அணிக்கு உள்ளூர் சூழல் சற்று அனுகூலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.