2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (07) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை இரண்டு விக்கெட்டுகளினால் தோற்கடித்தது.
இந்த வெற்றி CSK அணியின் தொடர்ச்சியான நான்கு தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த சீசனின் கடைசி சொந்த மைதான ஆட்டத்தில் KKR அணிக்கு இது ஏமாற்றமளிக்கும் முடிவாக அமைந்தது.
ஏனெனில், அவர்களின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இப்போது ஒரு நூலில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
180 ஓட்டங்களை துரத்திய CSK, பவர்பிளேயில் தங்கள் அணியின் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
ஒரு கட்டத்தில், அவர்கள் 5 விக்கெட்டுக்கு 60 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
இருப்பினும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய டெவால்ட் பிரெவிஸ் (25 பந்துகளில் 52 ஓட்டங்கள்), ஆக்ரோஷமாக விளையாடினார்.
குறிப்பாக வைபவ் அரோராவின் ஒரு ஓவரில் 30 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றினார்.
சில தாமதமான திருப்பங்கள் இருந்தபோதிலும், சிவம் டுபேவின் அமைதியான இன்னிங்ஸ் (40 பந்துகளில் 45 ஓட்டங்கள்) மற்றும் ஆடுகளத்தில் எம்.எஸ். தோனியின் உறுதியான துடுப்பாட்டம் CSK அணியை வெற்றிக் கோட்டைக் கடக்க உதவியது.
19 ஆவது ஓவரில் இரண்டு தாமதமான விக்கெட்டுகள் கூட CSK அணியின் வெற்றியை தடுக்கவில்லை.
இறுதி ஓவரில் தோனி ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
முன்னதாக, முதலில் துடுப்பாட்டம் செய்த KKR அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களை எடுத்தது.
கேப்டன் அஜிங்க்யா ரஹானே அதிகபட்சமாக 48 ஓட்டங்களை எடுத்தார்.
ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் மனிஷ் பாண்டே முறையே 38 மற்றும் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை எடுத்தனர்.
CSK, அணிக்காக, நூர் அகமட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவும் மதிப்புமிக்க பந்து வீச்சாளராக இருந்தார்.
இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியன் KKR அணிக்கு இப்போது எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 15 புள்ளிகளை எட்ட முடியும்.
மேலும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பது சாத்தியப்படாத விடயமாக உள்ளது.
மறுபுறம் CSK 12 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
மேலும் அவர்கள் ஏற்கனவே லீக் கட்டத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
மஞ்சள் படை இப்போது கடைசி இடத்தைப் பிடிப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தில் உள்ளது.