2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டப்படுமென மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கை (ஆபரேஷன் சங்கல்ப்) தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கையின் விளைவாக இதுவரையில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா ”கரேகுட்டா மலையில் ஒரு சமயத்தில் சிவப்பு பயங்கரவாதம் கோலோச்சி இருந்தது எனவும், தற்போது இந்திய தேசியக் கொடி பறப்பது பெருமையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர் வரும் 2026 மார்ச்ச மாதத்திற்குள் மாவோயிசத்தை அழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை நமது படைகளால் வெறும் 21 நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த ஆபரேஷனில் எந்த வீரருக்கும் பாதிப்பில்லாதது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் திட்டமிட்டதை விட மிக அதிகமாகவே செய்து முடித்துள்ளதாகவும், இதனால் தாம் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது முடிவின் ஆரம்பம் எனவும், 2026 மார்ச் 31க்குள் மாவோயிசத்தை ஒழிக்கும் இலக்கை தாம் அடையவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.