நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை மாநிலத்தில் வெளியிடுவதற்கு பொலிஸ் பாதுகாப்பு கோரிய மனுவுக்கு கர்நாடக அரசின் பதிலை இந்திய உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (13) கோரியது.
கர்நாடகாவில் சான்றிதழ் பெற்ற திரைப்படம் திரையிட அனுமதிக்கப்படவில்லை என்றும், படத்தைக் காண்பிக்கும் திரையரங்குகளுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் காரணமாக நடைமுறை தடை அமலில் உள்ளது என்றும் எழுந்த குற்றச்சாட்டை நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு மனு மீதான விசாரணையின் போது கவனத்தில் கொண்டது.
மனு தொடர்பான அவசர நிலைமையினை கருத்திற் கொண்டு, நாங்கள் பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்புகிறோம் என்றும் நீதிமன்றம் கூறியது.
பெங்களூருவைச் சேர்ந்த எம். மகேஷ் ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) சான்றிதழ் பெற்றிருந்தாலும், சில அமைப்புகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் மாநில அதிகாரிகளின் செயலற்ற தன்மை காரணமாக கர்நாடகாவில் இது தடைசெய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
‘கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது’ என்று கமல்ஹாசன் அண்மையில் கூறியது, கடும் எதிர்ப்புகளையும் அவரது படத்தைப் புறக்கணிக்க அழைப்புகளையும் கர்நாடகாவில் எழுப்பியது.