காசா முழுவதும் திங்களன்று (ஜூன் 30) இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய போர்நிறுத்த முயற்சிக்காக இஸ்ரேலிய அதிகாரிகள் வொஷிங்டனுக்கு வந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“காசாவுடன் ஒப்பந்தம் செய்யுங்கள், பணயக்கைதிகளை திரும்பப் பெறுங்கள்” என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்த ஒரு நாளுக்குப் பின்னர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவரும், இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர், ஈரான் மற்றும் காசா குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக வொஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (02) ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் அவர் சந்திப்புகளைத் தொடங்குவார் என்று வொஷிங்டனில் உள்ள வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஆனால் பாலஸ்தீனப் பகுதியில், சண்டை ஓய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
வடக்கு காசா பகுதியில் உள்ள பெரிய மாவட்டங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற இஸ்ரேலிய இராணுவம் திங்களன்று உத்தரவுகளை பிறப்பித்தது.
இதனால் புதிய அலை இடம்பெயர்வு ஏற்பட்டது.
திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெய்டவுனில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காசா நகரத்தின் தென்மேற்கே குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
13 பேரில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் குடியிருப்பாளர்களும் வான்வழித் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்தனர்.
காசா நகரில் உள்ள கடற்கரையோர ஹோட்டலில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2023 ஒக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் 220க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன பத்திரிகையான சிண்டிகேட் தெரிவித்துள்ளது.















