2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார்.
அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.