2025 ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (18) நடைபெறும் B குழுவின் இறுதி குழு நிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியானது இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று இரவு 08.00 மணிக்கு அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் ஆரம்பாமகவுள்ளது.
பங்களாதேஷுடன் ஏற்பட்ட ஏமாற்றமளிக்கும் தோல்விக்குப் பின்னர், ரஷீத் கானின் வீரர்கள் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்குடன் இந்தப் போட்டியில் களம் இறங்குகின்றனர்.
இன்றைய போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றால், இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு சமமான புள்ளிகளை அவர்கள் பெறுவார்கள்.
மூன்று அணிகளின் நிகர ஓட்ட விகிதம் சூப்பர் 4 இடத்தை தீர்மானிக்கும்.
ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு அவர்களின் பலமாகவே உள்ளது.
ஆனால் இந்த வார தொடக்கத்தில் ஒரு சாதாரண சேஸிங்கில் மோசமாகத் தடுமாறிய துடுப்பாட்ட வரிசை குறித்து கேள்விகள் நீடிக்கின்றன.
நெருக்கடியான தருணங்களில் அதிக நோக்கத்துடனும் பொறுப்புடனும் விளையாடுமாறு கேப்டன் ரஷீத் தனது அணியை வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை தோற்கடிக்கப்படாத இலங்கை, ஹொங்கொங்கிற்கு எதிரான ஆட்டத்தில் தடுமாறிய பின்னர் முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறது.
வனிந்து ஹசரங்க சிறந்த ஃபார்மிலும், முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் உறுதியாகவும் இருப்பதால், சரித் அசலங்காவின் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் சுப்பர் 4 சுற்றினை எட்ட முயற்சிக்கும்.



















