கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பிரித்தானிய மக்கள் பரிசுகளை கொள்வனவு செய்ய இந்த ஆண்டு அதிக பணம் செலவிட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 32 பவுண்டஸ் அதிகம் செலவிட நேரிடும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தபடி, இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் நுகர்வோர் சராசரியாக 377.98 பவுண்டஸ் செலவிடுவார்கள் எனவும், இது கடந்த ஆண்டு செலவிடப்பட்ட 345.35 பவுண்ட்ஸை விட ஒன்பது சதவீதம் அதிகமாகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிராந்திய ரீதியில் செலவீனங்கள் பிரித்தானியா முழுவதும் வேறுபாடுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு அயர்லாந்தில் உள்ள மக்கள் அதிகபட்ச செலவினத்தை எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, பரிசுகளுக்கு சராசரியாக 452.38 பவுண்ட்ஸ் செலவிட அவர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 324.37 பவுண்ட்ஸ் செலவிட எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையில், ஸ்காட்டிஷ் நுகர்வோர் 443.64 பவுண்ட்ஸ் செலவிடத் தயாராகி வருகின்றனர், மேலும் வேல்ஸ் நுகர்வோர்கள் சராசரியாக 366.11 பவுண்ட்ஸை செலவை எதிர்பார்க்கிறார்கள்.
இதேவேளை, இந்தப் பண்டிகைக் காலத்தில் பணத்தைச் சேமிக்கும் நோக்கில் 36 வீதம் பேர் வெளியே செல்வதை குறைத்துள்ளதாகவும், 34 வீதம் பேர் குறைவான ஆடைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், 27 வீதம் பேர் கிறிஸ்துமஸ் பயணத்தைத் தவிர்க்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.



















