பிரித்தானியாவின் புகலிட அமைப்பில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக, சட்டவிரோத குடியேற்றம் “நாட்டை பிளவுப்படுத்துவதாக” உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோத குடியேற்றம் நம் நாட்டை பிளவுப்படுத்துவதாகவும், சமூகங்களைப் பிளவுபடுத்துவதை காண முடிவதாகவும்” என்று ஷபானா மஹ்மூத் கூறியுள்ளார்.
இந்நிலையில், பரந்த அளவிலான குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு மத்தியில், மூன்று நாடுகள் மீது டிரம்ப் பாணி விசா தடைகளை விதிக்கத் தயாராகி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அங்கோலா, நமீபியா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள், பிரித்தானியாவில் இருந்து மக்களைத் திருப்பி அனுப்புவதில் ஒத்துழைப்பை மேம்படுத்தத் தவறினால், அந்த நாடுகளுக்கான வீசாக்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
இந்த மூன்று நாடுகளும் தங்கள் குடிமக்களைப் பெறுவதில் மிகவும் “தடையாக” இருப்பதாகக் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புகலிடம் பெறுவோருக்கு நிரந்தரமாக நாட்டில் குடியேற அனுமதிப்பதற்கு முன்னர் இருபது ஆண்டுகள் காத்திருப்பு காலம் விதிக்கப்படும் என்று உள்துறைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், உள்துறைச் செயலாளரின் நிலைப்பாட்டிற்கு தொழிற்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த அதிருப்திகளையும், விமர்சனங்களையும் நிராகரித்துள்ள உள்துறை செயலாளர், தனது சொந்த குடும்பத்தின் புலம்பெயர்ந்த பின்னணியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.















