பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர்.
இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் காலநிலை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த இந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தீப்பரவல் மின்சார சாதனங்களால் ஏற்பட்டிருக்கலாம், அநேகமாக அது ஒரு மைக்ரோவேவ் அடுப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலை அடுத்து உடனடியாக மக்களை வெளியேற்ற சைரன்கள் ஒலித்தன, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து கூட்டத்தைத் தடுக்க பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர், பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியே தப்பி ஓடினர்.
பின்னர், தீப்பரவலானது ஆறு நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் உள்ளூர் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.




















