பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நேற்றிரவு (21) ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி இலங்கையை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது.
இதன் மூலம், சிக்கந்தர் ராசா தலைமையிலான அணி, ஐசிசியின் முழு உறுப்பினர் கொண்ட ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ஓட்டங்கள் வித்தாயசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றிக்காக பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிராட் எவன்ஸ் ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
பென்னட் 42 பந்துகளில் 49 ஓட்டங்களை எடுத்தார், ராசா 32 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார், பந்து வீச்சில் பிராட் எவன்ஸ் 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (20) மாலை 6.00 மணிக்கு ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்ப்பவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்கா 32 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
அதேநேரம், எஷான் மலிங்க 2 விக்கெட்டுகளை எடுத்ததுடன், மஹீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
இன்னிங்ஸின் இறுதிப் பந்தில் கடைசி விக்கெட்டையும் இழந்தது.
அணியின் தலைவர் தசூன் ஷானக்க 25 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தது அணியின் அதிகபடியான தனிநபர் ஓட்ட இலக்கமாக பதிவு செய்யப்பட்டது.
அதேநேம், இலங்கையின் ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
சிம்பாப்வே சார்பில் பந்து வீச்சில் எவன்ஸ் சிறப்பாக செயல்பட்டார்.
தனது நான்கு ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரிச்சர்ட் ந்கரவா தனது நான்கு ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கிடையில், டினோடென்டா மபோசா, ராசா, கிரேம் க்ரீமர் மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கந்தர் ராசா தெரிவானார்.




















