நாடு முழுவதும் பரவிவரும் வெள்ள அனர்த்த நிலைமையை அடுத்து, பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக மீன்பிடிப் படகுகளை உடனடியாக ஈடுபடுத்துமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடற்றொழில் துறையின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் நோக்கில், அன்னாரின் தலைமையில் இன்று (29) அவசரக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இணையவழி ஊடாக நடைபெற்ற இந்த அவசர சந்திப்பில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரஅதிகாரி ஒருவரும் கலந்துகொண்டனர்.
அவிசாவளை, சிலாபம் மற்றும் கேகாலை போன்ற வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், மீட்புப் பணிகளுக்கு நிலவும் படகுப் பற்றாக்குறை குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
“எமது மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். படகுப் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே, கடற்றொழில் அமைச்சு என்ற வகையில், அந்தக் குறையை நிவர்த்தி செய்ய நாம் தலையிடுகிறோம்,” என பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
“அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடமிருந்து (DMC) கோரிக்கை கிடைத்தவுடன், தேவையான படகுகளை வழங்குமாறு எமது மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர்களுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.
இலங்கை கடற்படையினர் அந்தப் படகுகளின் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, வேகமானதும் ஒழுங்கமைக்கப்பட்டதுமான மீட்புப் பணியை உறுதிசெய்வார்கள்.”
இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தேசிய மீட்புப் பணிக்கு ஆதரவளிக்கும் முகமாக, கொழும்பிலிருந்து 30 படகுகள், நீர்கொழும்பிலிருந்து 20 படகுகள் மற்றும் அளுத்கமவிலிருந்து 20 படகுகளை உடனடியாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு இணையாக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான விரிவான திட்டம் ஒன்றையும் பிரதி அமைச்சர் அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்:
உடனடி சேத மதிப்பீடு: மீன்பிடிப் படகுகள், உபகரணங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வழங்குமாறு கடற்றொழில் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு (NAQDA) பணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு நேரடி நிவாரணம்: வழங்கப்படும் எந்தவொரு நிவாரணமும் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாகப் பாதிக்கப்பட்ட மீனவருக்குச் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலுக்குச் செல்ல முடியாத மீனவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான பிரேரணை ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உட்கட்டமைப்பு புனரமைப்பு: மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளுக்குச் செல்லும் சேதமடைந்த அணுகல் வீதிகள் குறித்து துரித கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டு, புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 26 ஆம் திகதி அமைச்சினால் வெளியிடப்பட்ட முன் எச்சரிக்கைகள், கடலில் ஏற்படவிருந்த ஒரு பெரும் அனர்த்தத்தைத் தடுப்பதற்கு உதவியதாக நினைவுகூர்ந்த பிரதி அமைச்சர், அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய மீனவ சமூகத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
















