2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை (01) ரஞ்சியில் தனது ஒருநாள் போட்டித் தொடரை வலுவாகத் தொடங்கியது.
விராட் கோலியின் 52 ஆவது ஒருநாள் சதமும், குல்தீப் யாதவின் நான்கு விக்கெட்டுகளும் இந்தியாவை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற உதவியது.
இதனால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
கோலி 120 பந்துகளில் 135 ஓட்டங்களை எடுத்து இந்தியாவை 50 ஓவர்களில் 349/8 என்ற மிகப்பெரிய இலக்கை எட்ட உதவினார்.
தென்னாப்பிரிக்கா ரன் சேஸிங்கில் சிறப்பாக துடுப்பாட்டம் செய்தது, ஆனால் இலக்கினை கடக்கத் தவறியது.
இறுதியாக 49.2 ஓவர்களில் 332 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்து வீச்சில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் பிரசித் கிருஷ்ணா
ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
மேத்யூ ப்ரீட்ஸ்கே (72), மார்கோ ஜோன்சன் (70), மற்றும் கார்பின் போஷ் (67) ஆகியோர் ரன் சேஸிங்கில் ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த பின்னர் அணியை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.
ஆனால், இந்திய அணி மீண்டும் போராடி வெற்றி பெற்றது.
முன்னதாக, கோலியின் சதமும், ரோஹித் சர்மாவுடன் (57) அவர் எடுத்த 136 ஓட்ட இணைப்பாடடமும் 300 ஓட்டங்களை கடப்பதற்கு இந்திய அணிக்கு உதவியது.
ரோஹித் சாதனை
இந்த இன்னிங்ஸில் ரோஹித் ஒரு உலக சாதனையை முறியடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 352 ஆவது சிக்ஸரை அடித்து, பாகிஸ்தான் முன்னாள் தலைவர் ஷாஹித் அப்ரிடியின் 351 ஓட்டங்களை முறியடித்தார்.
இது தவிர கே.எல். ராகுல் 56 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்து இந்திய அணி ஒரு பெரிய இலக்கை (349) அடைய உதவினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போடியானது எதிர்வரும் 3 ஆம் திகதி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.













