நீண்ட இடையூறுக்குப் பின்னர் இண்டிகோ விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், விமானங்களின் நிலையை அறிந்த பிறகு, பயணத்தை உறுதி செய்யுமாறு பயணிகளுக்கு டில்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இண்டிகோ விமானங்கள் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து ரத்து செய்யப்பட்டன.
நவம்பரில் மட்டும் 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 1000 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், விமான நிலையங்களில் குவிந்த பயணிகள், கோபத்தில் இண்டிகோ நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் விசாரித்து வரும் நிலையில், டிசம்பர் 10 முதல் 15ம் திகதிக்குள் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, வழக்கமான விமான சேவைகள் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனத்தின் பொது இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘டிசம்பர் 5 ஆம் திகதியும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் பயணிகளின் அசவுகரியத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். அநேகமாக, டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்குள் பிரச்னைகள் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், பயணிகள் விமானத்தின் நிலையை ஒருமுறை சரிபார்த்து விட்டு, விமான நிலையத்திற்கு வருமாறு டில்லி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.















