வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற பயங்கர விபத்தை தொடர்ந்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் மூன்றாம் திகதி வில்லெஸ்டனில் உள்ள சேப்பல் க்ளோஸ் பகுதியில் பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இது குறித்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.
இந்த விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணை தொடங்கப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வில்லெஸ்டனைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபர் மீது நேற்று ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், சந்தேகநபர் இன்று ஹைபரி கார்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேகநபருக்கு உதவி குற்றச்சாட்டில் கடந்த நான்காம் திகதி சந்தேகத்தின் பேரில் 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.















