இன்று (19) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அதன்படி, உடுதும்பரவில் இந்தக் கால கட்டத்தில் சுமார் 201 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதிலும் உள்ள 34 பெரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி, கசிந்து கொண்டிருப்பதாக DMC தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் கலா வெவ, ராஜாங்கனை, நச்சதுவ மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்கள் கசிந்து வருகின்றன.
கண்டி மாவட்டத்தில் பொல்கொல்ல, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களும் கசிந்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர்த்தேக்கமும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரமும் கசிந்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கலா வெவயின் இரண்டு வான் கதவுகள் தலா 6 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா ஐந்து அடி வீதமும், இரண்டு கூடுதல் வான் கதவுகள் தலா நான்கு அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
நாச்சதுவ நீர்த்தேக்கத்தில், நான்கு வான் கதவுகள் தலா நான்கு அடி வீதமும், மூன்று கூடுதல் வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மண்சரிவு மற்றும் தொடர்புடைய சம்பவங்கள் காரணமாக பதுளை, மாத்தளை, கிளிநொச்சி, கேகாலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள பல வீதிகளூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.














