நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதான (MCG) ஆடுகளம் திருப்தியற்றதாக காணப்பட்டிருந்தாக கூறியுள்ள சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC), அது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்து இருந்ததாகவும் தீர்ப்பளித்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அவுஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த டெஸ்ட் போட்டியானது இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது.
1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலிருந்தும் எந்த ஒரு வீரரும் 50 ஓட்டங்கள் என்ற தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை எட்டாதது இதுவே முதல் முறை.
இதற்கு ஒரு முக்கிய காரணியாக ஆடுகளம் இருந்தது.
அதில் புல் 10 மி.மீ நீளத்திற்கு வெட்டப்பட்டது, இது கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் பொக்ஸிங் டே டெஸ்டை விட 3 மி.மீ நீளமானது.
இந்த நிலையில் திங்களன்று (29) வெளியிட்ட அறிக்கையில் மெல்போர்ன் ஆடுகளம் தரத்திற்குக் கீழே இருந்ததை ஐசிசி உறுதிப்படுத்தியது.
மெல்போர்ன் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்று போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் கூறினார்.
முதல் நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்ந்தன, இரண்டாவது நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன, எந்த ஒரு அணி வீரரும் அரை சதம் கூட எட்டவில்லை.
இதனால், ஆடுகளம் திருப்தியற்றதாக காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் பெற்றது.
ஒரு மைதானம் ஐந்து வருட காலத்திற்கு ஆறு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அந்த மைதானம் சர்வதேச கிரிக்கெட்டை நடத்துவதிலிருந்து 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.சி.சி அதன் தரப்படுத்தல் முறையை மாற்றியமைத்த பின்னர் அவுஸ்திரேலியாவில் ஒரு மைதானம் தரமற்றதாகக் கருதப்படுவது இதுவே முதல் முறை.
இதனிடையே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியானது முன்கூட்டியே முடிந்ததால், சுமார் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.


















