2026 ஆம் ஆண்டானது ‘ஓநாய் சூப்பர் மூன்’ (Wolf Supermoon) உடன் தொடங்குவதனால், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள வான பார்வையாளர்கள் மூச்சடைக்கக்கூடிய ஒரு விருந்தை காண்பதற்காக எதிர்பார்த்துள்ளனர்.
2026 ஜனவரி 3 அன்று முழு நிலவானது சராசரி இரவில் தோன்றுவதை விட கணிசமாக பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.
இது வானியலாளர்கள் மற்றும் சாதாரண பொது மக்களுக்கு புத்தாண்டிற்கான ஒரு சரியான தொடக்கத்தை வழங்கும்.
சந்திரன் நமது கிரகத்திற்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைப் புள்ளியை அடையும் போது, நமது பூமியின் உப கோளினது எளிய அழகையும் இரவு வானத்தின் மர்மத்தையும் ரசிப்பவர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு அற்புதமான தருணத்தைக் குறிக்கிறது.
ஜனவரி 3 ஆம் திகதி நிகழ்வின் போது, சந்திரன் நமது கிரகத்தில் இருந்து சுமார் 3,56,500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்.
இதனால் சந்திரன் சாதாரண தோற்றத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும்.
ஏன் இதற்கு ‘ஓநாய் சூப்பர் மூன்’ என்று பெயர்?
ஜனவரி மாதத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவின் போது, உணவிற்காக அலைந்து திரியும் ஓநாய்களின் சத்தம் (ஊளையிடுதல்) வழக்கத்தை விட அதிகமாகக் கேட்கும். பழங்கால நம்பிக்கைகள் மற்றும் அதன் அடிப்படையில் உருவான காரணங்களால், ஜனவரி மாத முழு நிலவை ‘ஓநாய் நிலவு’ (Wolf Moon) என்று அழைக்கின்றனர்.















