இந்தோனேசியாவும் மலேசியாவும் கடந்த வார இறுதியில் எலோன் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI-க்கான அணுகலைத் தடை செய்தன.
பாலியல் உள்ளடக்கத்தை உருவாக்குதாக குற்றம் சாட்டப்பட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பைத் தடை செய்த முதல் நாடுகளாக இன் மூலம் அவை மாறின.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி ஆபாச உள்ளடக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முழு சமூகத்தையும் பாதுகாக்க இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு க்ரோக்கிற்கு தற்காலிகத் தடை விதிக்கிறது என்று சனிக்கிழமை (10) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்குமாறு தளம் X-ஐ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது என்று அது தெரிவித்துள்ளது.
அதேநேரம், பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை க்ரோக்கிற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதாக மலேசியாவின் இணைய ஒழுங்குமுறை ஆணையகம் ஞாயிற்றுக்கிழமை (11) கூறியது.
மலேசிய சட்டத்தை மீறக்கூடிய AI-உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் தடுக்க X Corp மற்றும் xAI LLC-க்கு மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் அறிவிப்புகளை அனுப்பியதாகவும், ஆனால் நிறுவனத்தின் பதில்கள் AI கருவியால் ஏற்படும் உள்ளார்ந்த அபாயங்களை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவும் கூறியது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இந்த நடவடிக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடையற்ற படங்களை உருவாக்குவதற்கு AI கருவி பரவலான கண்டனங்களைப் பெற்றதை அடுத்து மேற்கண்ட நாடுளின் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
















