அமெரிக்காவின் குவாண்டானாமோ (Guantánamo Bay) சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அபு சுபைதா (Abu Zubaydah) என்பவரிடம், பிரித்தானிய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக ஒரு பெரும் தொகையை நஷ்டஈடாக வழங்கியுள்ளது.
அவர் மீதான சித்திரவதைகளுக்கு பிரித்தானிய உளவுத்துறை உடந்தையாக இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அபு சுபைதா, கடந்த 2002 முதல் 2006 வரை பல்வேறு நாடுகளிலுள்ள சி.ஐ.ஏ (CIA) இரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு, 83 முறை ‘வாட்டர்போர்டிங்’ (waterboarding) உள்ளிட்ட கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதன்போது அவரிடம் கேட்பதற்கான கேள்விகளை பிரித்தானியாவின் MI5 மற்றும் MI6 பிரிவுகள் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆரம்பத்தில் அவர் அல்கொய்தாவின் முக்கிய உறுப்பினர் என அமெரிக்கா கூறியபோதிலும், பின்னர் அந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
தற்போது 54 வயதான அவர், எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இன்றி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே வாடுகின்றார்.
சர்வதேச விதிகளை மீறி சித்திரவதைகளுக்குத் துணை நின்றதற்காக பிரித்தானியா நஷ்டஈடு வழங்கியிருப்பதை அபு சுபைதாவின் சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர்.
அதேவேளை, பிரித்தானிய அரசு இதற்காக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.















