நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றுப் போட்டியில் வியத்தகு முறையில் நடந்த மோதலுக்குப் பின்னர் துர்கியேவின் ஜெய்னெப் சோன்மெஸ் (Zeynep Sonmez) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஞாயிற்றுக்கிழமை (18) நடந்த இந்தப் போட்டியின் போது அரங்கில் மயங்கி விழுந்த ஒரு பந்து சேகரிக்கும் சிறுமிக்கு அவர் உடனடியாக உதவினார்.
மெல்போர்னில் வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், உலக தரவரிசையில் 112 ஆவது இடத்தில் உள்ள சோன்மெஸ், இரண்டாவது செட்டில் ஆட்டத்தை நிறுத்தி, உடல்நிலை சரியில்லாத பந்து சேகரிக்கும் சிறுமிக்கு உதவினார்.
இதனால், கூட்டத்தினர் மற்றும் டென்னிஸ் சமூகத்தினரிடமிருந்து அவர் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.
துருக்கிய வீராங்கனை இறுதியில் ரஷ்யாவின் 11 ஆவது நிலை வீராங்கனையான எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலமாக அவர் இந்த ஆண்டின் தொடக்க கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இரண்டாவது சுற்றை எட்டிய துருக்கிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, சோன்மெஸ் பந்து சேகரிக்கும் குறித்த சிறுமியை நோக்கி ஓடி வந்தபோது, அவள் நாற்காலி நடுவரின் அருகில் மயங்கி விழுந்தாள்.
அந்தப் பெண் மீண்டும் தனது நிலையை மீட்டெடுக்க முயன்றாள், ஆனால் மீண்டும் தடுமாறினாள்.
சோன்மெஸ் அந்தப் பெண்ணின் கையை தன் தோளில் வைத்து மருத்துவ சிகிச்சைக்காக ஒரு இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.
போட்டி மனப்பான்மை மற்றும் விளையாட்டுத் திறமை இரண்டையும் கண்ட கூட்டத்தினரின் கைதட்டலால் இந்த தலையீடு வரவேற்கப்பட்டது.
அதேநேரம், மயக்கமுற்று அரங்கில் வீழ்ந்த சிறுமி சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியதை போட்டி ஏற்பாட்டாளர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர்.













