பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து எந்த வித அனுமதியும் இன்றி கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை விற்பனை செய்து வந்த கடையொன்றை வட்டவளைப் பகுதியில் ஹட்டன் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு இன்று (19) சுற்றிவளைத்து பிடித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது மதன மோதாக மாத்திரைகள் (குண்டுகள்) பெருமளவு கைப்பற்றப்பட்டதுடன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பிரிவு பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரிலும் ஹட்டன் பிரிவு இல.01 -பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் நிஷ்ஷங்க கொடமுல்ல அவர்களின் வழிநடத்தலிலும் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
வட்டவளைப்பகுதியில் அமைந்துள்ள குறித்த கடையை பரிசோதித்த போது இந்த சட்டவிரோத வியாபாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுற்றிவளைப்பு நடைபெற்ற நேரத்தில் கடை உரிமையாளர் அங்கு இல்லாத காரணத்தால், அங்கு பணியாற்றிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை (20) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.












