டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்காக 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தல், QR பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், Cloud உட்கட்டமைப்பு வசதிகள் மையத்தை நிறுவுதல், அதிவேக பிரோட்பேண்ட் (BroadBand) வசதிகளை வழங்குவதற்கான தேசிய திட்டம், Single window வசதிகளை வழங்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் மற்றும் போக்குவரத்து அபராதக் கட்டணம் செலுத்துதலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் (Traffic Spot Fine) உட்பட இலங்கையில் நாணயத்தாள் அற்ற பொருளாதாரத்தை (Cashless Economy) ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விரிவான மீளாய்வு இங்கு இடம்பெற்றது.
மேலும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட GovTech நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் புதிய ஆட்சேர்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.













