உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடிப் படகுகளை வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கவும், அத்துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறியவும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் கடந்த 26 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள ‘நோர்த் வெஸ்ட் மரைன் லங்கா’ (Northwest Marine Lanka Pvt Ltd) படகு உற்பத்தித் தொழிற்சாலைக்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டு வரும் பல படகுகள் பிரதி அமைச்சரால் பார்வையிடப்பட்டன.
விசேடமாக, விரைவில் மொரிஷியஸ் (Mauritius) நாட்டிற்கு கையளிக்கத் தயாராகவுள்ள, முழுமையாக இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட 140 மில்லியன் (14 கோடி) ரூபா பெறுமதியான நவீன மீன்பிடிப் படகு குறித்து அவர் விசேட கவனம் செலுத்தினார்.
பைபர் கிளாஸ் (Fiberglass) படகு உற்பத்தியில் முன்னோடி நிறுவனமாக, உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த உற்பத்திச் செயற்பாடுகள் அவரால் பாராட்டப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே:
“நாட்டிற்குத் தேவையான அந்நியச் செலாவணியை (டொலர்) ஈட்டித் தருவதற்குப் பங்களிக்கும் இவ்வாறான உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை ஊக்குவிப்பது எமது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். இக்கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்க நாம் உறுதியளிக்கிறோம்.”
அரச நிறுவனங்கள் ஊடாக இடம்பெறும் சில நிர்வாகத் தாமதங்கள் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளில் சில நட்டங்களும் தடைகளும் ஏற்படுவதாக உற்பத்தி நிறுவனத்தின் முகாமைத்துவத்தினால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் கலந்துரையாடி, நடைமுறைகளை வினைத்திறனாக்குவதற்கும், தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்துப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நோர்த் வெஸ்ட் மரைன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

















