செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) இந்திய தொழில்நுட்ப (ஐ.டி.) சேவை துறை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து தொழில்நுட்ப துறை அமைப்பான நாஸ்காம் கூறியதாவது:
இந்திய தொழில்நுட்ப சேவைகளை ஏஐ சீர்குலைக்காது. இத்துறையின் செயல்பாட்டையும், பங்களிப்பையும் ஏஐ மறுசீரமைத்து மேம்படுத்தும். ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட் கோவர்க்’ போன்ற புதிய ஏஐ உபகரணங்கள், பல்வேறு பணிகளை தானியங்கி முறையில் செயல்பட வைக்கும். ஆனால், இந்திய ஐ.டி. சேவைகளை அது புறக்கணிக்காது. மாறாக அவற்றின் திறன்களை ஏஐ உபகரணங்கள் மேம்படுத்தும்.
சட்டம், விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற துறைகளில் பணிகளைத் தானியங்கி முறையில் செயல்பட வைக்கும் ஏஐ கருவிகளால் இந்தியாவின் ஐ.டி. சேவை துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கவலைகள் தவறானவை. சிக்கலான தொழில்நுட்ப சூழல்களுடன் செயல்படும் உலகளாவிய நிறுவனங்களுடன் இந்திய ஐ.டி. சேவை நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன.
காலத்துக்கு ஏற்ப முன்னேறுவதற்கு, இந்திய ஐ.டி.நிறுவனங்கள் தங்களை மறுசீரமைக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதனால் ஏஐ வரவு ஐ.டி. துறையை சீர்குலைக்கும் என்ற கவலை தேவையற்றது. இவ்வாறு நாஸ்காம் தெரிவித்துள்ளது.



















