டெர்பி (Derby) நகர மையத்தில் கார் மோதியதில் காயமடைந்த ஏழு நபர்களில் இருவர் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி கடந்த சனிக்கிழமை அன்று இரவு சுமார் 09:30 மணியளவில் டெர்பி (Derby) நகர மையத்தின் ஃபிரையர் கேட் பகுதியில் கார் மோதியதில் 7 பேர் கொண்ட குழுவினர் காயமடைந்தனர்.
இதையடுத்து கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 36 வயதான நபரிடம் விசாரணை நடத்த புலனாய்வாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி கடுமையான காயம் ஏற்படுத்தியது, உள்நோக்கத்துடன் கொடூரமான உடல் காயத்தை விளைவித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த கார் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பற்காக உள்ளூர் சமூகங்களும் தொண்டு நிறுவனங்களும் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கிழக்கு மிட்லாண்ட்ஸ் மேயர் கிளேர் வார்ட் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களில் தற்போது இரண்டு பேர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 5 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர், எனினும் அவர்களில் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அவர் உறுதிபடுத்தினார்.













