2019 ஆம் ஆண்டு உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றம் கண்டு வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் நடந்து ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (21) காலை நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் உரையாற்றிய பேராயர், சில தரப்பினர் விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்திருந்த போதிலும், சட்டமா அதிபரும், சட்டமா அதிபர் திணைக்களமும்நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்தமை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட நபர்களை, அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், குற்றப் புலனாய்வுத் துறை விசாரிப்பது அவசியம்.
உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் வலியுறுத்தினார்.
















