முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை (12) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
2013 ஆம் ஆண்டு விமானங்களை வாங்கியபோது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் குறித்து அறிக்கை கோரி, இலஞ்ச ஆணைக்குழு அனுப்பிய அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவும் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என்று அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே கூறியுள்ளார்.
இருப்பினும், சில சட்ட விஷயங்கள் தொடர்பாக வழக்கறிஞர்கள் குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
எனினும், அந்த வாக்குமூலமானது அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டது என கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மனோஜ் கமேஜ், அத்தகைய சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்படுவது பாரதூரமான விடயம் எனவும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.














