இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார்.
அதன்படி, அவர் இன்று முதல் 2026 செப்டம்பர் 10 ஆம் திகதி வரை தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
தனது விஜயத்தின் போது, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் பல அதிகாரிகளைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது குறித்தும் இந்தப் பயணத்தின்போது மீளாய்வு செய்யப்படும் என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 38 ஆண்டுகளில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இதற்கிடையில், ராஜ்நாத் சிங்கின் வருகையை முன்னிட்டு கொழும்பில் சிறப்புப் போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, மூன்று நாள் பயணத்தின்போது இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் வேளைகளில், கொழும்பின் பல முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட நேரங்களில் போக்குவரத்துத் தடைகள் விதிக்கப்படும்.

















