புத்த பெருமானின் போதனைக்கமைய ஒழுங்கமைந்துள்ள முன்மாதிரி உரிமைகளைக் கொண்ட இலங்கை, மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘மனிதன், பூமி மற்றும் சுபீட்சத்துக்கான காலநிலைச் செயற்பாடுகளை விருத்தி செய்தல்’ என்ற தலைப்பிலான அரச தலைவர்கள் கலந்துரையாடலில், வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச ரீதியிலான நிலக்கரியற்ற புதிய சக்தி வலு மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பதையிட்டு இலங்கை பெருமையடைகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரகடனத்தின் கீழ், சதுப்பு நிலச் சுற்றாடல் கட்டமைப்பு மற்றும் ஜீவனோபாயம் தொடர்பான செயற்பாட்டுக் குழுவுக்கும் இலங்கை தலைமை வகிக்கின்றது.
பசுமை நைட்ரஜன் முகாமைத்துவம் தொடர்பான கொழும்பு அறிக்கையின் பிரகாரம், நைட்ரஜன் வாயு வெளியீட்டின் அளவை 2030ஆம் ஆண்டாகும் போது அரைவாசியாகக் குறைப்பதற்கு இலங்கை முயற்சி எடுத்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டுக் கொள்கையின் வரையறை, மேலாண்மை பற்றி அவதானம் செலுத்தி உள்ளமையினை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதன்மூலம் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், நைட்ரஜன் கழிவுகளை குறைத்துக்கொள்ளவும் முடியும்.
இலங்கையில் காபன் அளவை 2050ஆம் ஆண்டாகும் போது பூச்சியமாக்கிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதோடு, 2030ஆம் ஆண்டாகும்போது இந்நாட்டின் சக்தி வலுத் தேவையில் 70 சதவீதத்தை மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்கள் மூலம் நிறைவு செய்துகொள்ளும் இலக்கை அடைந்துகொள்வதற்காக இலங்கை பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்தச் சிறப்பான நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக, எமது அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்காகத் தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் அபிவிருத்தி, முதலீடு மற்றும் நிதி நன்கொடை போன்ற துறைகளில் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.














