கேரளாவில் இரண்டாவது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு திரும்பிய மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவருக்கு கடந்த மாதம் 18 ஆம் திகதி குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 26 வயது இளைஞர் ஒருவரின் மாதிரிகள், ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தனியார் மருத்துவனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அதரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு இரண்டாகவும், இந்தியாவில் மூன்றாகவும் உயர்ந்துள்ளது.
குரங்கம்மை பாதிப்பினால் ஏற்கெனவே கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குரங்கம்மை பாதிப்பு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















