பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் இன்று நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘இந்திய பாதுகாப்பு படைகளை நினைத்து தாம் பெருமைப்படுவதாகவும், ஜெய்ஹிந்த் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் ‘பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய இராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது எனவும், தேச நலன் கருதி தமது ராணுவத்திற்கு என்றும் தாம் துணை நிற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதே போல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்திரபாபு நாயுடு யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களும், மல்லிகார்ஜுன கார்கே, ஓவைசி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த பதிலடி தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















