நாடு முழுவதும் பல பகுதிகளில் நடந்த மூன்று வீதி விபத்துக்களில் இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரக்காபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துகள் நிகழ்ந்தன.
மாங்குளம் – முல்லைத்தீவு வீதியின் ஒலுமடு பகுதியில், மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாலத்தின் கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
இவர் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார்.
இதனிடையே, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கமுவ-மொரகொல்லாகம வீதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு-கண்டி வீதியின் தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த கெப் வண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயமடைந்து, வாரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இறந்தவர் நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.














