எட்டு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரரின் முன்னிலையில் நோவக் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்து தனது 16 ஆவது விம்பிள்டன் காலிறுதிப் போட்டியை எட்டினார்.
லண்டன், ரோயல் பாக்ஸில் திங்களன்று (07) நடைபெற்ற இந்தப் போட்டியில் 37 வயதான செர்பிய நட்சத்திரம் போராட்டங்களைத் தாண்டி 1–6, 6–4, 6–4, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டி மூன்று மணி நேரம் 19 நிமிடங்கள் நீடித்தது.
ஏழு முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச், தற்சமயம் 25 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சியில் உறுதியாக உள்ளார்.
மேலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் எட்டு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற சுவீஸ் வீரர் பெடரரின் சாதனையையும் அவர் சமன் செய்ய காத்துக் கொண்டுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை சுவீஸின் முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் நேரில் கண்டுகளித்தார்.

ஜோகோவிச் இப்போது, காலிறுதியில் 23 வயதான இத்தாலியின் ஃபிளேவியோ கோபோலியை எதிர்கொள்வார்.
கோபோலி, முன்னதாக மரின் சிலிச்சை தோற்கடித்து தனது தொழில் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் கடைசி எட்டுக்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















