பாரிய அளவிலான ஆயுதங்கள், ஒரு தொகை போதைப்பொருட்கள் என்பவற்றை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு SMG வகை துப்பாக்கிகள், பத்து 9 மில்லி மீட்டர் தோட்டாக்கள் கொண்ட இரு மெகசின்கள், T56 துப்பாக்கி வகை ஆயுத பாகங்கள், 9.24 கிலோ ஹெராயின் மற்றும் 67.57 கிலோ கேரள கஞ்சா உள்ளிட்டவை மீட்கப்பட்ட பொருட்களாகும்.
கடந்த ஜூலை 03 ஆம் திகதி ராகமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ‘ஆர்மி உபுல்’ என்ற நபர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ராகம, படுவத்த மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர்.
அப்போது, அவரது பையில் 09 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெராயின் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் சந்தேக நபர், ராகமை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தான் வழங்கியதாகவும், அதை தனது தற்காலிக இல்லத்தில் மற்றொரு ஆயுதத்துடன் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து குறித்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.
மேலும் விசாரணையில் 67 கிலோவுக்கு மேல் எடையுள்ள கஞ்சா மற்றும் ஆயுதங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
26 வயதான சந்தேக நபர் பொரளை, பேஸ்லைன் வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன், தற்போது மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
















