அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து திங்களன்று (14) தங்கத்தின் விலை மூன்று வார உச்சத்தைத் தொட்டது.
2025 ஜூன் 23 ஆம் திகதிக்குப் பின்னர் அதிகபட்ச விலையை எட்டிய தங்கத்தின் விலை திங்களன்று GMT 0637 மணியளவில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.1% உயர்ந்து 3,359.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அமெரிக்க தங்க எதிர்காலம் 0.3% உயர்ந்து 3,373.30 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதேவேளை, கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (14) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 268,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 248,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் சனிக்கிழமை அச்சுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.














